காலேவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 372 ரன் இலக்கை துரத்திய இலங்கை 206 ரன்னுக்கு சுருண்டதுடன் போட்டி இந்திய பக்கம் முடிந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 462 ரன் குவித்தது. இதில் தேவ்தத் படிக்கல் 167 ரன் எடுத்து அதிகபட்சமாக பங்களித்தார். பதிலுக்கு விளையாடிய இலங்கை 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது; தினுஷா 100 ரனும், டிக்வெல்லா 80 ரனும் எடுத்து அணியை ஓரளவு மீட்டனர்.
178 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. பன்ட் 66, படிக்கல் 44, கேஎல் ராகுல் 35 ரன் எடுத்ததைத் தவிர மற்றவர்கள் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. இந்தியா 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானதால் இலங்கைக்கு 372 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நான்காம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்திருந்தது. ஐந்தாம் நாளில் டி சில்வா 59, தினுஷா 84 ரன் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தாலும், மற்றவர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை 206 ரன்னுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சில் மனவ் சுதார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.





