நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தென் ஆப்ரிக்காவை 6-1 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.

பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடைபெற்று வருகிறது. உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய அணி, ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, சீனா, தென் ஆப்ரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

சீனாவுக்கு எதிரான முதல் போட்டியை சமனில் முடித்த இந்தியா, இரண்டாவது ஆட்டத்தில் 18வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 11வது நிமிடத்தில் சுனேலிதா கணக்கைத் தொடங்க, தொடர்ந்து நவ்னீத் கவுர் (17) மற்றும் சுஷிலா சானு (25) கோல்கள் அடித்தனர். முதல் பாதி முடிவில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியிலும் இந்தியாவின் தாக்குதல் தொடர்ந்தது. தீபிகா (38) மற்றும் லால்ரெம்சியாமி (44) தலா ஒரு கோல் சேர்த்தனர். 45வது நிமிடத்தில் சுனேலிதா தனது இரண்டாவது கோலை அடித்தார். தென் ஆப்ரிக்காவின் டி வால் காய்லா (55) ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 6-1 என வெற்றி பெற்றது.

‘டி’ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 2-4 என சீனாவிடம் தோல்வியடைந்தது. மேலும் ‘சி’ பிரிவில் அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றது.