மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக, பிளஸ் 2 முடித்த நான்கு மாணவியர் மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

புகாரில், இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் தொந்தரவு செய்ததாக மாணவியர் தெரிவித்துள்ளனர். இதை முன்பே பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் பள்ளியின் பெயர் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவியர் குற்றம்சாட்டினர். தங்களைப் போல மற்ற மாணவியரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே கலெக்டருக்கு கடிதம் அனுப்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். ஸ்ரீதர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார், பள்ளி முதல்வர், வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.