மும்பையின் நவ ஷேவா துறைமுகம் அருகே, வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) அதிகாரிகள் 55 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.300 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்காச்சோளத்தில் கலந்து போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சரக்கு துறைமுகத்துக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், மும்பையைச் சேர்ந்த இறக்குமதி நிறுவனங்கள் வழியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 22 டன் மக்காச்சோளத்துக்காக தொடர்பு கொண்டு, அதில் 17.5 டன் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய தகவலின் அடிப்படையில் கிடங்கில் சோதனை நடத்திய போது, ஒரு மூட்டையில் உள்ள பொருள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆய்வக பரிசோதனையில் அதில் மெத்தம்பெட்டமைன் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர சோதனையில் மொத்தம் 55 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் முகமது ஹூசைன் என்ற நபர் தலைமையிலான கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.





