நீட் தேர்வை நடத்தும் தற்போதைய நடைமுறையில் எந்தவித குளறுபடியும் செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீட்டை கணினி வழி தேர்வாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது. மே 3 அன்று நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 21 அன்று மறு தேர்வு நடத்தப்பட்ட பின்னணியில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வினாத்தாள் தயாரிப்பில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கினார். உதாரணமாக, இயற்பியல் போன்ற பாடத்திற்கு 500 கேள்விகள் கொண்ட தொகுப்பில் இருந்து தலா 100 கேள்விகள் தேர்வு செய்து 4 வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன; அதில் இருந்து 2 வினாத்தாள்களை தேர்வு முகமை இயக்குநர் தேர்ந்தெடுப்பதாக அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வினாத்தாள்கள் சிசிடிவி கண்காணிப்பும் சிஐஎஸ்எப் பாதுகாப்பும் உள்ள நிலையில் முத்திரையிடப்பட்ட பெட்டிகளில் அச்சுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன; டிஜிட்டல் குறியீடு மூலம் மட்டுமே அவை திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அச்சிடப்பட்ட பிறகு எந்த வினாத்தாள் எந்த தேர்வு மையத்திற்கு செல்கிறது என்ற தகவல் அச்சிடும் பணியாளர்களுக்கு தெரியாது; முழு செயல்முறையும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.





