புதுடில்லி: தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வினாத்தாள் குழுவை சீரமைக்கும் நடவடிக்கையாக 600 நிபுணர்களை நீக்கி, புதிய உறுப்பினர்களை இணைத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் தொடர்பான சமீபத்திய பிரச்னைகளைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உயர்கல்வித்துறை அமைச்சர், என்டிஏ இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

தேர்வுகள் சுமூகமாக நடைபெற தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வினாத்தாள் பாதுகாப்பை வலுப்படுத்த நான்கு அடுக்கு வினாத்தாள் சோதனை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அடுத்த 2 முதல் 3 வாரங்களில் 20 முதல் 25 அதிகாரிகளை அமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நியமனங்கள் குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனுடன், என்டிஏ அலுவலகம் போர்க்கால அடிப்படையில் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு சிஐஎஸ்எப் வீரர்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.