புதுடில்லி: பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (பி.எம். கேர்ஸ்) 2024-25 நிதியாண்டில் ரூ.8,452.95 கோடி இருப்பாக உயர்ந்துள்ளது. 2023-24ல் இது ரூ.7,173 கோடியாக இருந்ததாக, சமீபத்தில் வெளியான தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் உடனடி நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் 2020 மார்சில் இந்த நிதி உருவாக்கப்பட்டது. மத்திய அரசு நிர்வகிக்கும் இந்த நிதிக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களும் நன்கொடைகள் வழங்கி வருகின்றன.
தணிக்கை விவரப்படி, ரூ.6,641 கோடி வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு, அதிலிருந்து ரூ.475 கோடி வட்டி வருவாய் கிடைத்துள்ளது. ஏற்கனவே உள்ள தொகைக்கு கிடைத்த வட்டி வருவாய் மூலம் மொத்த இருப்பு உயர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உள்நாட்டு நன்கொடைகள் 2023-24ல் ரூ.681.81 கோடியாக இருந்த நிலையில், 2024-25ல் ரூ.479.05 கோடியாக குறைந்துள்ளன. வெளிநாட்டு நன்கொடைகளும் ரூ.11.35 லட்சத்திலிருந்து ரூ.9.28 லட்சமாக குறைந்துள்ளன.
மேலும், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற உதவிகளுக்காக பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.87.85 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், நன்கொடைகள் குறைந்தபோதும் வட்டி வருவாய் காரணமாக மொத்த இருப்பு உயர்ந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.





