சேலம் அருகே வாழப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த இரு சிறுமிகள் மீது, மது குடிக்க வைத்த பின்னர் பாலியல் வன்கொடுமை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், 8 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியர்கள் இருவர், விடுதி துப்புரவு பணியாளராக உள்ள வாழப்பாடியைச் சேர்ந்த ராதிகா (40) இரவில் விடுதியை விட்டு வெளியே அழைத்து சென்று, வாழப்பாடியைச் சேர்ந்த ரகுபதி (37) என்பவருடன் பழக வைத்ததாகவும், அதன் பின்னர் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகவும் கூறியுள்ளனர்.
போலீசார் கூறுகையில், ராதிகா மற்றும் ரகுபதி நெருக்கமாக பழகியதாகவும், இரவில் ரகுபதியை விடுதிக்கு அடிக்கடி வரவழைத்து மது அருந்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் மாணவியர்களுக்கும் மது ஊற்றி கொடுத்ததாகவும், பின்னர் ரகுபதி மாணவியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த சம்பவம் சில மாதங்களாக தொடர்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ராதிகாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ரகுபதியை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கில், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த புதிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





