மேகமலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமதமின்றி அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடுமையான உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு செயல்படுத்தும் வேகம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேகமலை பகுதியில் 98 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,000 குடும்பங்கள் வசிப்பதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. மேகமலையின் சில பகுதிகள் மேகமலை புலிகள் காப்பகத்தின் கீழ் வருவதால், ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28க்குள் அகற்ற வேண்டும் என முன்பே கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கூடுதல் கால அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது. ஆனால் நீதிபதிகள் அந்த கோரிக்கையை ஏற்காமல், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர்.
மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் இலவம் பஞ்சு தோட்டங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அந்த பயிரிடப்பட்ட நிலங்களை முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்றவும் கூறப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தேவையானால் துணை ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் உருவாகலாம் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.





