குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை குறித்து போலீசார் சமூக ஊடகங்களில் இடும் பதிவுகளை கட்டுப்படுத்தக் கோரிய பொதுநல மனுவில், மத்திய அரசு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மேலும் மெட்டா மற்றும் எக்ஸ் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஸ்ருதஞ்சய பரத்வாஜ் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், போலீசார் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறையை ஒழுங்குபடுத்த மாநில அரசுகள் பொருத்தமான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றஞ்சாட்டப்பட்டோரின் முகம் அல்லது அடையாளம் வெளிப்படும் வகையிலான உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்வதையும், அவர்களை இழிவாக சித்தரிக்கும் பதிவுகளையும் தடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோரின் அடையாளம் வெளிப்படாத வகையில் தடை விதிக்க வேண்டும் என்றும், இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து பதில் பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.