தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான அனுமதிகளை 21 நாட்களுக்குள் வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் பெற்றுத் தரும் பணியில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தொழில் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சில துறைகள் அனுமதி வழங்குவதில் தாமதம் செய்வதால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தவிர்க்க, தொழில் திட்டங்களுக்கு 21 நாட்கள் என்ற சட்டப்பூர்வ காலக்கெடு நிர்ணயிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட நடைமுறையில், ஒரு விண்ணப்பத்திற்கு 21 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், அந்த அனுமதி தானாக வழங்கப்பட்டதாக கருதப்படும் வகையில் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகிறது.





