சில அரசியல் குழுக்கள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை தமிழக உயர்கல்வித்துறை வாபஸ் பெற்றுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், இத்தகைய போராட்டங்களில் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

டெல்லியில் நடந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் கலந்து கொண்டு கலவரம் செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் துறை தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியது.

சுற்றறிக்கை வெளியானதும், ஆளும் அணியை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவை ஆகஸ்ட் 19 அன்று உயர்கல்வித்துறை திரும்பப் பெற்றது.