மதுரை: தமிழகம் முழுவதும் பயணிகள் போக்குவரத்து குறைவாக இருக்கும் நாட்களில், குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் வருவாயை உயர்த்துவதுடன் டீசல் செலவையும் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக அனைத்து மண்டலங்களிலும் பஸ் சேவையை குறைப்பதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து குறைவாக இருக்கும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்படுவதால் எரிபொருள் செலவு கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் முகூர்த்த நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள், கிராமப்புறங்களில் மாணவர்கள் மற்றும் தினசரி வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர் அரசு பஸ் சேவையை முழுமையாக நம்பியிருப்பதாகவும், வருவாய் குறைவு காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவது சரியா எனவும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள், அதிக சேவைகள் உள்ள வழித்தடங்கள் மற்றும் தனியார் போட்டி இல்லாத வழித்தடங்களைத் தேர்வு செய்து, அதிலும் குறைந்த வருவாய் தரும் சேவைகள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்படும்; இது செயல்திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கை என்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தனர்.





