அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3வது குழந்தை பிறப்புக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 3வது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், அது ஓராண்டாக உயர்த்தப்படுகிறது.

தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர்கள் சரத்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா தங்கள் துறைகளின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் கூறுகையில், திருமணமான அரசு பெண் ஊழியர்களில் இரண்டு குழந்தைகள் உள்ளவர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் விடுப்பும் வழங்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டார். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் நல அரசாக இருப்பதால், 3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும் என்றார்.

மேலும் மத்திய, மாநில போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி வெற்றி பெற உதவும் வகையில் ‘வெற்றிப்பாதை’ என்ற மொபைல் செயலி ரூ.20 லட்சத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ரூ.12.5 கோடியில் ஐந்து மாடி கூடுதல் இணைப்பு கட்டடம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் கீழ் சமூக ஊடக கண்காணிப்பு மையம், பயிற்சி நிலைய மேம்பாடுகள் மற்றும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் 150 அரசு சேவைகளை மறுசீரமைத்து இணைய வழியில் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நகர்ப்புற அரசு கட்டடங்களை உலக தரத்தில் அமைத்தல், ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை எளிமைப்படுத்தல், அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கட்டட மேலாண்மை மேற்கொள்ளல் உள்ளிட்ட முன்மொழிவுகளை தெரிவித்தார். சென்னை, தூத்துக்குடி, கோவை நகரங்களை தேசிய/மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் விரைவு சாலை திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ரூ.5 கோடியில் ஆய்வு செய்யப்படும் என்றும், மாநிலத்தில் சாலை விபத்து உயிரிழப்புகளை குறைக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.