கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) கட்டி முடித்துள்ள 220 வீடுகள் நகரில் இன்னும் விற்பனை ஆகாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், முழுமையான ஆன்லைன் நடைமுறையை வாரியம் முன்னெடுக்கிறது.
வாரிய தகவலின்படி, சிங்காநல்லூரில் 32 வீடுகள் கிடைக்கின்றன. காந்திபார்க் மற்றும் பொன்னையராஜபுரம் பகுதிகளில் உயர்தர வருவாய் பிரிவில் 2 வீடுகள் உள்ளன. மத்திய தர வருவாய் பிரிவில் 22 வீடுகளுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.41 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வீட்டு மனைகளும் விற்பனைக்கு உள்ளன. சிறப்பு திட்ட கோட்டம்-3 சார்பில் பெ.நா.பாளையத்தில் 1, 2 மற்றும் 5 சென்ட் அளவுகளில் 150 வீட்டுமனைகள் உள்ளதாகவும், ஒரு சதுர அடிக்கு ரூ.1,000 வீதம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை மற்றும் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய, வீட்டு வசதி வாரியத்தின் நடைமுறைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன. வாங்க விரும்புவோர் வாரிய இணையதளங்களில் பதிவு செய்து, இடம், பரப்பளவு, விலை, தரைத்திட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பார்த்து தேர்வு செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணம் உயர்தர வருவாய் பிரிவுக்கு ரூ.826, மத்திய வருவாய் பிரிவுக்கு ரூ.590, குறைந்த வருவாய் பிரிவுக்கு ரூ.472 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மொத்த மதிப்பின் 10% தொகையை ஆன்லைன் போர்ட்டலில் இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். கோவை மண்டல பொறியாளர் ஜேக்கப் நாயகம், இந்த ஆன்லைன் நடைமுறை ஆக.21 முதல் செப்.26 வரை நடைபெறும் என்றும், பயனாளிகள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.





