சென்னை அடுத்த கோவளத்தில் இன்று காலை தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புதுச்சேரியிலிருந்து கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கவர்னர் பங்கேற்கும் சூழலில், முதல்வர் ரங்கசாமி மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், நிர்வாகியாக உள்ள கவர்னருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதே கவர்னர்–முதல்வர் இடையிலான முரண்பாட்டை தீவிரப்படுத்தியதாக தகவல். மாநாட்டில் கவர்னருக்கு முன்னுரிமை வழங்கப்படும், முதல்வர் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவார் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், புதுச்சேரியின் ஒரே பிரச்னைகளை இருவரும் பேச வேண்டிய நிலை உருவாகி தர்மசங்கடம் ஏற்படலாம் என்பதும் காரணமாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், புதுச்சேரி முதல்வரை சமாதானப்படுத்தி மாநாட்டில் பங்கேற்கச் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





