மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்படும் கருத்துகள் தொடர்பான வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு நாடியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
வழக்கு விவரங்களின்படி, ஜூலை 1-ஆம் தேதி தனது தொகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மஹூவா மொய்த்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் மீது முட்டைகள் மற்றும் கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதை விமர்சித்து அவர் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அந்த கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என கோல்கட்டா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து ஆஜராகாததை காரணமாகக் கொண்டு கிருஷ்ணநகர் 3-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரிய அவரது மனுவை, அவர் ஆஜரான பின்னரே பரிசீலிக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.





