டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகள் முக்கிய விவாதமாக இடம்பெற்றன.
இளைஞர்களிடையே செல்வாக்கு அதிகரித்து வரும் சமூக வலைதளங்கள் மூலம் அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அமைச்சர்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து, மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரை உள்ள காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு அறிக்கை ஒவ்வொரு அமைச்சருக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அரசின் நலத்திட்டங்கள் இன்றைய இளம் தலைமுறையினரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், தினமும் ஒரு மத்திய அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நாள் முழுவதும் நடைபெறும் பயணங்களில், அமைச்சர்கள் அரசுத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறித்து மாணவர்களிடம் விளக்க வேண்டும்; அதே நேரத்தில், நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த மாணவர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என கூறப்பட்டது.
இந்த பல்கலைக்கழகப் பயணங்களை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒருங்கிணைப்பார்கள் என முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.





