சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் விஜய், காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளும் கட்டாயமாக மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, விவசாயம், வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு நீர் அடிப்படை எனக் கூறிய அவர், மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் சட்டபூர்வமாகவும் முழுமையான ஒத்துழைப்புடனும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றார். உரிய அளவு நதி நீரைப் பகிராமல் காவிரி விவகாரத்தில் ஒத்துழைப்புக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய முதல்வர், உளவுத்தகவல் பரிமாற்றம் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும் என்றார். கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்தல் தொடர்பாகவும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.
மருத்துவ சேர்க்கை தொடர்பாக 12ஆம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல், மதுபானங்களைத் தவிர மாநிலங்களுக்கு வருவாய் ஆதாரங்களில் மாற்றம் செய்யும் சுதந்திரம் குறைந்துள்ளதாகவும், வரி விகிதங்களை நிர்ணயிப்பதில் மாநிலங்களின் சுதந்திரத்தை மீண்டும் பெற மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டும் என்றும், மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். லோக்சபாவில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





