புதுடில்லி: தலைநகரின் முக்கிய தூதரகப் பகுதியான சாணக்யபுரியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பிருந்த தடுப்புச்சுவர்களை டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் புல்டோசர் உதவியுடன் இடித்து அகற்றினர்.

தூதரக வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதுடன், விசா பிரிவுக்காக வரிசையில் நிற்கும் இடத்தில் இருந்த ஏற்பாடுகளும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே இருந்த பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிடக் கம்பங்களை பாகிஸ்தான் அகற்றிய மூன்று நாட்களுக்குப் பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் ஸ்ரீநகருக்கு சென்றபோது ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு முக்கியப் பகுதி என குறிப்பிட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.