சென்னை: மின்வாரியப் பொருட்கள் கொள்முதல் தொடர்பான டெண்டர் முறைகேடு புகார்களை விசாரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.

2021 முதல் 2023 வரை மின்வாரியத்திற்காக அலுமினிய கண்டெக்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் ரூ.1028 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக 2026 ஜூன் 30-ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், சில நிறுவனங்கள் சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் அரசின் இறுதி டெண்டர் மதிப்பை விட குறைவாக இருந்ததாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரே ஐ.பி. முகவரியை பயன்படுத்தி பல நிறுவனங்களின் பெயரில் டெண்டர் கோரப்பட்டிருந்தது என்ற சந்தேகமும் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மின் விநியோக கழக அதிகாரிகள் வீடுகள், பிற அரசு ஊழியர்கள், தனிநபர்கள் மற்றும் விநியோக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் முறைகேடுகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், ஒப்பந்தப் புள்ளி கோரியதற்கான டிஜிட்டல் பதிவுகள், போலி நிறுவனங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.