மஹாத்மா காந்தி எழுதிய கையெழுத்து பிரதிகளின் தொகுப்பு மும்பையில் நடந்த ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று இவ்வளவு உயர்ந்த தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதங்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவரும் காந்தியின் சீடருமான ஆனந்த் டி. ஹிங்கோரனிக்காக எழுதப்பட்டவை. ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்ததையடுத்து, அவருக்கு ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல் அளிக்கும் வகையில் காந்தி தினமும் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

தகவலின்படி, இந்தக் கடிதப் பரிமாற்றம் 23 மாதங்கள் நீடித்து, மொத்தம் 688 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. உண்மை, அஹிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கடிதங்கள் பின்னர் A Thought for the Day என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தருணங்களுடன், காந்தி–ஹிங்கோரனி நட்பு, வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களையும் இது பதிவு செய்கிறது.

மும்பையில் உள்ள சப்ரோன்ஆர்ட் ஏல மையத்தில் நடைபெற்ற இந்த ஏலம் “Gandhi: From the Collection of Anand D. Hingorani” என்ற தலைப்பில் நடந்தது. இதில் காந்தி தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்து பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்களும் இடம்பெற்றிருந்தன.