ஆம்ஸ்டல்வீனில் நடந்த முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா, உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அரையிறுதிக்கான பாதையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. ‘டி’ பிரிவில் உள்ள இந்திய அணி, முன்பு வேல்சை 3-1 என வென்றதுடன், இங்கிலாந்திடம் 2-4 என தோல்வியடைந்திருந்தது.
அரையிறுதிக்கான அடுத்த சுற்றுக்கு செல்ல வெற்றி அவசியம் என்ற நிலையில் இந்தியா தொடக்கத்திலேயே முன்னிலை பெற்றது. 5வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். 11வது நிமிடத்தில் அபிஷேக் அடித்த பந்து பாகிஸ்தான் வீரரின் ஸ்டிக்கில் பட்டு வலைக்குள் சென்றது. 21வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் மீண்டும் கோல் அடித்தார். பாகிஸ்தானின் அப்துல் ஹன்னன் கோல் மூலம் பதிலளித்த நிலையில், 24வது நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் சேர்த்தன. முதல் பாதி முடிவில் இந்தியா 4-2 என முன்னிலையில் இருந்தது.
35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹர்திக் சிங் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை அதிகரித்தார். 46வது நிமிடத்தில் ஹன்னன் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். 56வது நிமிடத்தில் ஆதித்யாவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால் கடைசி 5 நிமிடம் இந்தியா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்தியா 5-3 என வென்று, பாகிஸ்தானை அரையிறுதிப் போட்டி வாய்ப்பிலிருந்து வெளியேற்றியது.





