மும்பையில் நிலப்பரப்பு குறைவு, அதிகரிக்கும் வீட்டு வசதி தேவை, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவற்றுக்கு தீர்வாக நவி மும்பையைத் தாண்டி புதிய மெகா நகரத்தை உருவாக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ‘கே.எஸ்.சி. நியூ டவுன்’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாகவும், இதை ‘மும்பை 3.0’ எனவும் குறிப்பிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நகரம் 323.44 சதுர கி.மீ. பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. ராய்காட் மாவட்டத்தின் உரான், பன்வெல், பென் தாலுகாக்களில் உள்ள 124 கிராமங்களை இணைத்து நகரமைப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் மேம்பாட்டு ஆணையமாக மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (MMRDA) நியமிக்கப்பட்டுள்ளது.
மும்பை–நவி மும்பை–ராய்காட் பகுதிகளை இணைக்கும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அருகாமையில் இந்த நகரம் அமையவுள்ளதாக கூறப்படுகிறது. அடல் பாலம், நவி மும்பை சர்வதேச விமான நிலையம், பன்வெல்–கர்ஜத் ரயில் பாதை, விரார்–அலிபாக் பல்வழி போக்குவரத்து வழித்தடம், மும்பை–புனே விரைவுச்சாலை ஆகியவை போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்த முயற்சிக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன; நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு மற்றும் புதிய நகரில் முன்னுரிமை உள்ளிட்ட ஏற்பாடுகளை MMRDA அறிவித்துள்ளது.
திட்டத்தில் குடியிருப்பு மற்றும் தொழில் பகுதிகளுடன் தகவல் தொழில்நுட்ப மையங்கள், தரவு மையங்கள், நிதி சேவைகள், சுகாதாரம், கல்வி, சரக்கு போக்குவரத்து மையங்கள் போன்றவை இடம்பெற உள்ளன. மேலும் பசுமை மண்டலங்கள், காடுகள், கலப்பு பயன்பாட்டு குடியிருப்புகள் மற்றும் பல்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.





