சென்னை: தமிழகத்தில் தற்போது உள்ள அரசு முக்கிய பிரச்னைகளுக்கு பதில் சொல்லாமல், ‘ரீல்ஸ்’ வெளியிட்டு ‘ரீல்’ விடும் அரசாக செயல்படுகிறது என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்தார்.
சவுதி அரேபியா கடல் பகுதியில் ஈரானிய கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சபாநாயகர் அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாததை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, சட்டசபை விதி எண் 55ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தார். சவுதியில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஆகஸ்ட் 12 அன்று கடலுக்கு சென்றதாகவும் கூறினார்.
அப்போது நடந்த தாக்குதலில் மாவீரன் (38) உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருதல், காயமுற்றவர்களை மீட்டு உரிய சிகிச்சை வழங்குதல், குடும்பங்களுக்கு உதவி செய்வது உள்ளிட்டவற்றுக்காக அரசின் கவனத்தை ஈர்க்கவே தீர்மானம் கொண்டு வந்ததாக கூறினார்.
முன்னர் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அரசு குரல் கொடுப்பது கடமையாக இருந்ததாகவும், தற்போது ‘தமிழகத்தை காப்போம்’ என பேச்சளவில் மட்டும் பேசும் அரசு வெளிநாடு வாழ் தமிழர்களையும் பாதுகாக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.




