தேனி மாவட்ட மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; இல்லையெனில் வனத்தை பாதுகாக்க துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேகமலை மற்றும் நெல்லை மாவட்ட மாஞ்சோலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மேகமலை சரணாலய வனப்பகுதிக்குள் 4,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், அவர்களுக்கு மாற்று இடம் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மூன்று மாத அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளில், இலவம்பஞ்சு தோட்டங்களில் வேலைக்கு ஆட்களை அமர்த்தியதே ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டு, சரணாலயத்திற்குள் உள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக கையகப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும்; எந்த சலுகையும் காட்டக் கூடாது என தெரிவித்தனர். விடுதிகளை மூடுவது மட்டும் போதாது; ஆக்கிரமிப்பு கட்டடங்களை ஒன்றுவிடாமல் இடித்து அகற்ற வேண்டும் என்றும், மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யாருக்கும் நிலப் பட்டா வழங்கக் கூடாது என கூறிய நீதிமன்றம், மேகமலை சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலை குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அடுத்த விசாரணை செப்டம்பர் 8-க்கு ஒத்திவைக்கப்பட்டது.





