நாடு முழுவதும் காணாமல் போன மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளை அறிவியல்பூர்வமாக அடையாளம் கண்டு குடும்பத்தினருடன் இணைக்க உதவும் வகையில், தேசிய அளவில் டி.என்.ஏ. மற்றும் பயோமெட்ரிக் அடையாள முறையை உருவாக்க வேண்டும் என்ற மனுவில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த பொதுநல மனுவை வழக்கறிஞர் ரீபக் கன்சால், வழக்கறிஞர் பிரவீர் சவுத்ரி மூலம் தாக்கல் செய்துள்ளார். காணாமல் போகும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை குடும்பத்துடன் சேர்ப்பது நாளுக்கு நாள் சிக்கலாகி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் சம்மதத்துடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் டி.என்.ஏ. மாதிரிகளை கட்டாயமாக சேகரிக்க வேண்டும் என்றும், அடையாளம் தெரியாமல் மீட்கப்படும் குழந்தைகளிடமும் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரித்து குடும்பத்தினரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்காக சட்டப் பாதுகாப்புடன் கூடிய தேசிய தரவுத்தளத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும், போலீஸ் பதிவுகள், காப்பகங்கள், குழந்தைகள் நலக் குழுக்கள், மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவுகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு தரவுகளை நிகழ்நேரத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த தேசிய கட்டமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முறையான தத்தெடுப்பு செயல்முறையை முடிப்பதற்கு முன், அந்தக் குழந்தையின் டி.என்.ஏ. விவரங்களை தேசிய பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டது.





