திருநெல்வேலி மாவட்டம் மேலஇலந்தகுளம் பகுதியில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம் (47) என்பவருக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
வழக்குத் தரப்பின் தகவலின்படி, கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மதபோதகராக ஊழியம் செய்து வந்தார். ஊழியப் பணிக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12, 13, 8 வயது சிறுமிகள் உட்பட நான்கு சிறுமிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சிறுமிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தது. மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் கூடுதல் எஸ்.பி. சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி நீதிபதி சுரேஷ்குமார் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் இதுவரை நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.





