மதுரை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி வழங்கியிருந்தும், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தமிழக அரசு முன்னெடுக்காததால், அவை தேசிய மற்றும் தனியார் வங்கிகளுடன் போட்டியிட முடியாமல் பின்தங்குகின்றன.
தமிழக கூட்டுறவுத் துறையின் கீழ் நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. ரூ.10 கோடி முதல் ரூ.300 கோடி வரை பரிவர்த்தனை அளவுடன் 126 நகர கூட்டுறவு வங்கிகள் தனித்தனியாக இயங்குகின்றன.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன், மாவட்ட அளவில் சிதறிக் கிடக்கும் அமைப்பு காரணமாக பரிவர்த்தனை அளவு குறைந்து, பிற வங்கிகளின் போட்டியை சமாளிப்பது கடினமாகிறது என தெரிவித்தார். தேசிய வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய வங்கிகளாக உருவாகும் நிலையில், குறைந்த முதலீடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாமை காரணமாக கூட்டுறவு வங்கிகள் மேலும் பின்னடைவுக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
‘கோர் பேங்கிங்’ வசதி இருந்தாலும், ஒரு மாவட்ட நகர கூட்டுறவு வங்கியில் இருந்து மற்றொரு மாவட்ட நகர வங்கிக்கு பணம் செலுத்தவும் எடுக்கவும் சிரமம் இருப்பதாக அவர் கூறினார். மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் குறியீட்டு எண்ணை பயன்படுத்தும் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வீட்டுக்கடன், கார் கடன் போன்றவற்றின் இ.எம்.ஐ. தொகையை எங்கிருந்தும் செலுத்த முடியாத நிலை உள்ளது என்றும், நகர கூட்டுறவு வங்கிகளுக்கு தனித்தனி ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டு எண் இல்லாததால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தடையாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு கூட்டுறவு வங்கி’யாக மாற்றவும், நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல வங்கிகளாக ஒருங்கிணைக்கவும் ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் கூட்டுறவு வங்கிகள் பின்தங்கிய நிலையிலேயே தொடர்கின்றன என்றார்.





