தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் நேற்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட விரிவாக்கமும், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வும் முக்கியமாக இடம்பெற்றன.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான ஆண்டுத் தொகை வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்க பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருநங்கையருக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் ரூ.351 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்; மேலும் ஏழு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கி 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கூடுதலாக 6,098 மாணவர் இடங்களும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புற்றுநோய் தடுப்பு மற்றும் தரமான சிகிச்சைக்காக ரூ.673 கோடி மதிப்பீட்டில் ‘முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ செயல்படுத்தப்படும். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தரைத்தளம் உட்பட 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு ரூ.471 கோடியில் அமைக்கப்படும். தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் நிறுவப்படும்; முதல் கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் மண்டல மையம் தொடங்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை, ‘லீனியர் ஆக்சலேட்டர்’ கதிர்வீச்சு உள்ளிட்ட நவீன கருவிகள் ரூ.106 கோடியில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதனுடன், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார். கொள்முதல் விலையில் ரூ.1 மற்றும் அரசு ஊக்கத்தொகையில் ரூ.2 உயர்த்துவதன் மூலம், 2022 நவம்பர் முதல் வழங்கப்பட்டு வரும் லிட்டருக்கு ரூ.38 என்ற விலை ரூ.41 ஆக மாற்றப்படுகிறது. இந்த உயர்வால் அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக ரூ.30 கோடியும், ஆண்டுக்கு ரூ.360 கோடியும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.




