தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்புகளில், அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றன. தொகுதி பணிகள் மற்றும் அலுவலகப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள உதவும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 12 அன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி, பல எம்.எல்.ஏ.க்களிடம் சொந்த வாகனம் இல்லாததால் தொகுதி ஆய்வு மற்றும் பார்வையிடுதல் கடினமாக இருப்பதாக சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்திருந்தார். எளிய பின்னணியில் இருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் குறைகளை நேரில் கேட்டு அரசு திட்டங்கள் சென்றடைவதை கண்காணிக்க தொடர்ந்து பயணம் அவசியம் என முதல்வர் கூறினார்.

இதன் அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் பிறரை சார்ந்து இல்லாமல் தங்கள் தொகுதிக்குள் சுதந்திரமாகச் சென்று மக்களை நேரடியாக சந்திக்க உதவும் வகையில் அரசு வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எம்.எல்.ஏ.க்களின் பொருளாதார சுமை குறைந்து வெளிப்படையான நிர்வாகத்துக்கு துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வாகனத்திற்கு டிரைவர் சம்பளம், எரிபொருள், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ₹75,000 வழங்கப்படும். அலுவலகப் பணிகளில் உதவியாக உதவியாளரை நியமிக்க மாதம் ₹25,000 வழங்கப்படும். இதற்காக சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்து அரசாணைகள் வெளியிடப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

அதிகாரிகள் கூறுகையில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகருக்கு ஏற்கனவே அரசு சார்பில் ‘இன்னோவா’ கார் வழங்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தவிர 199 எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த வாகன ஏற்பாடு பொருந்தும் என தெரிவித்தனர். மேலும், தற்போதுள்ள ஊதிய அமைப்பில் வழங்கப்படும் ₹25,000 வாகனப்படியானது புதிய ஏற்பாடுகளுடன் தொடருமா என்பது குறித்து நிதித்துறை முடிவு செய்யும் என்றும் கூறினர்.