சென்னை: சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் புதிய வசதியில், சொத்தின் வில்லங்கச் சான்றிதழை (EC) இணைப்பது கட்டாயம் என தமிழக பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
வீடு மற்றும் மனை விற்பனை பத்திரங்களை ஆன்லைன் வழியாக தாக்கல் செய்து பதிவு செய்யும் வசதி மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், பதிவுத் துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்ட உத்தரவில் சில நடைமுறை வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பத்திரத்தில் திருத்தம் அல்லது கூடுதல் தகவல் தேவைப்பட்டால், அதை சார்-பதிவாளர்கள் ஒரே நாளில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பத்திரத்தை பதிவுக்கு ஏற்காமல் நிராகரிக்கும் சூழலில், நிராகரிப்பதற்கான காரணத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருத்தத்திற்காக திருப்பி அனுப்பப்பட்ட பத்திரம் மீண்டும் தாக்கல் செய்யப்படும் போது, ஏற்கனவே செலுத்திய கட்டண விவரங்களை ஏற்க வேண்டும்; தேவையற்ற காரணங்களை முன்வைத்து பத்திரங்களை நிராகரிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களிலும் ரசீதுகளிலும் சார்-பதிவாளர் டிஜிட்டல் கையொப்பம் இட வேண்டும். ஆன்லைன் தாக்கலில் வில்லங்கச் சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம்; போலி ஆவணங்கள் உருவாவதைத் தடுக்கும் நடைமுறைகளை சார்-பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தரப்பில், அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யும் வசதி பத்திரப் பதிவை எளிதாக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்கள் உள்ளீடு செய்யும் சொத்து விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லங்கச் சான்றை தானியங்கி முறையில் இணைக்கும் வசதி ஏற்படுத்தினால், தனியாக கட்டணம் செலுத்தி சான்று வாங்கி இணைப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.





