சென்னை: சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, அரசு மூன்று துறைகள் தொடர்பாக ஆய்வு செய்து திரட்டியதாக கூறப்படும் ஊழல் ஆதாரங்கள் தன் டேபிளில் இருப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். இதை வெளியிடச் சொல்லி தி.மு.க. தரப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், அமைச்சர்கள் பல விஷயங்களை சுட்டிக்காட்டும் போது எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்பதாகவும், அதற்கான ஆதாரங்களை முதல்வர் திரட்டி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், இதை சொல்ல வேண்டாம் என நினைத்ததாக கூறினார். ஒரு வாரத்திற்கு முன் நிதி அமைச்சர் பேசும்போது, மூன்று துறைகள் குறித்து ஆய்வு செய்து அதன் விவரங்கள் முதல்வரின் டேபிளில் இருப்பதாக சொன்னதாக அவர் நினைவூட்டினார்.
அந்த விவரங்கள் அனைத்தும் ஆதாரத்துடன் இருப்பதாக கூறிய விஜய், அதை முன்கூட்டியே ‘ஓபன்’ செய்ய வற்புறுத்த வேண்டாம் என்றும், எப்போது வெளியிட வேண்டுமோ அப்போது சரியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களிடம் எப்போது, என்ன, எப்படி பேச வேண்டும் என்பதையும் முடிவு செய்து செயல்படுவோம் என கூறிய அவர், இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.





