நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லைகள் எவ்வளவு உறுதியாக பாதுகாக்கப்படுகின்றன என்பதில்தான் அடங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். எல்லை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) மூலம் வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை வழங்குமாறு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பலமுறை தீவிரமாக கோரியதாகவும், அந்த கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இந்தியா–வங்காளதேச எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலம் பலமுறை கேட்டும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 1,129 ஏக்கர் நிலம் கேட்டதாகவும், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ அரசு அமைந்த பின்னரே அந்த நிலம் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முந்தைய அரசுகள் உரிய அங்கீகாரம் அளிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பாடப்படும் வரை, ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவம் இந்தியாவில் ஒருபோதும் பாடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலுக்கு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தேசம் இறுதியாக இதற்கு அங்கீகாரம் அளித்தது தமக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.





