சென்னை: நாட்டின் மொத்த வளர்ச்சிக்கு தென் மாநிலங்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

தென் மாநிலங்களின் வளர்ச்சி பயணம் மூன்று தூண்களின்மீது அமைந்துள்ளதாக அவர் கூறினார். அதிக கல்வியறிவு, பயிற்சி பெற்ற மனிதவளம், ஆழ்கடல் வளங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை அந்தத் தூண்கள் எனவும், இவைதான் தென் மாநிலங்களை நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பாளர்களாக மாற்றியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புத்தாக்கம் மற்றும் வருவாய் உருவாக்கம் ஆகிய துறைகளில் தென் மாநில மக்கள் மற்றும் அரசுகள் புதிய மரபை உருவாக்கியுள்ளதாகவும், இந்த அனுபவத்திலிருந்து நாடு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா கூறினார். இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் தென் மாநிலங்கள் பங்களித்துள்ளதால் அந்நிய முதலீடும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நதிநீர் பங்கீட்டு விவகாரங்களில், வட மாநிலங்களில் இருந்த பிரச்னைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டதாகவும், தென் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகளும் புதிய அணுகுமுறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜல்சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மாநிலக் குழுக்கள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் எனவும், மாநில நலனைப் பாதுகாப்பது சரியானதே என்றாலும் பிற மாநிலங்களின் நியாயமான நீர்பங்கீடு தடைபடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், “போதையில்லாத பாரதம்” உருவாக்குவது மாநில அரசுகளும் சமூகமும் ஏற்க வேண்டிய பொறுப்பு என அமித்ஷா கூறினார். இதற்காக மத்திய அரசு மூன்று ஆண்டு திட்ட வரைபடத்தை தயாரித்துள்ளதாகவும், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.