புதுடில்லி: புனேவில் நடைபெற உள்ள ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த காங்கிரஸ் தரப்பு இன்புளூயன்சர்களுக்கு பணம் வழங்க முயன்றதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 22 அன்று புனேவில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் “சத்ரோன் கி கஞ்ச்” (மாணவர்களின் குரல்) என்ற தலைப்பில் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை 30 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சியை சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்த யூடியூபர்கள் உள்ளிட்ட இன்புளூயன்சர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க காங்கிரஸ் தரப்பு முன்வந்ததாக பாஜ கூறுகிறது. அந்த தொகை பயணச் செலவுக்காக என உறுதி அளிக்கப்பட்டதாகவும் பாஜ தெரிவித்துள்ளது.

இதற்கான ஆதாரமாக, தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு தொலைபேசி உரையாடல் பதிவை பாஜ வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் பிரமுகர் என குறிப்பிடப்படும் ஒருவர், ஒரு இன்புளூயன்சரை தொடர்பு கொண்டு ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்துமாறு கேட்டு, பணம் வழங்குவதாக கூறுவது பதிவாகியுள்ளது.

இந்த பதிவை முன்வைத்து, மக்கள் ஆதரவை “விலைக்கு வாங்க” முயல்கிறார் என பாஜ விமர்சித்துள்ளது. மேலும், தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதாகவும் பாஜ குற்றம்சாட்டியுள்ளது.