இஸ்லாமாபாத்: சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்த கனரக ராணுவ போக்குவரத்து விமானங்கள், 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விமானங்களில் ராணுவ தளவாடப் பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

வெளியான செய்திகளின்படி, ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள நூர் கான் விமானப்படைத்தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத்தளம் ஆகிய இடங்களில் சில தினங்களுக்கு முன் இந்த விமானங்கள் தரையிறங்கின. ஆனால், கொண்டு வந்த சரக்குகள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

கடந்த ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான்–சீனா உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன் திறன்கள் உள்ளிட்டவற்றில் சீனாவை பாகிஸ்தான் பெரிதும் நம்புகிறது எனவும் தகவல்.

இதற்கிடையில், இம்மாத தொடக்கத்தில் போர் விமான மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த துருக்கி–பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே சமீபத்தில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடப்படுகிறது.

இந்த சூழலில், சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியதாக வரும் தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், கூடுதல் விழிப்பை ஏற்படுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது.