13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும், சிறுவர்களின் இரவு நேர இணையப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கவும் கோரிய பொதுநல மனுவை பரிசீலித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மனுவில், சமூக ஊடகங்களில் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்கள் போதிய தணிக்கையின்றி வெளிப்படையாக கிடைப்பதாகவும், அதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சிலர் வழிதவறிச் செல்லும் அபாயமும் உருவாகலாம் என மனுதாரர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தடுக்கும் வகையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கட்டாய வயது சரிபார்ப்பு முறைகளை கொண்டு வர வேண்டும் என்றும், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதே நேரத்தில், மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.