சென்னை அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெறலாம் என வடமாநில ஊடகங்களில் வெளியான செய்திகளே இதற்குக் காரணம்.
2021 முதல் தி.மு.க. ஆட்சி காலத்தில் மாநில அரசுக்கும் மத்திய பா.ஜ. அரசுக்கும் மோதல் போக்கு நீடித்ததாக கூறப்படுகிறது. மோடி அரசையும் பிரதமரையும் தி.மு.க. கடுமையாக விமர்சித்ததுடன், பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க.வைவும் தாக்கியது.
ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு அரசியல் களம் மாறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 22 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே த.வெ.க. அணியில் சேர்ந்ததாகவும், வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் த.வெ.க. பக்கம் சாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்தச் சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.வுடன் தி.மு.க. கரம் கோர்க்க முயல்கிறது எனவும் கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை முன்பு கடுமையாக எதிர்த்த தி.மு.க., தற்போது “லோக்சபாவில் தமிழக பிரதிநிதித்துவ சதவீதம் குறையாமல் இருந்தால் ஏற்கலாம்” என்ற நிலைக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. முன்னாள் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி சோமு, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என கூறியுள்ளார். இதற்கிடையில் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், தி.மு.க. ஆட்சியில் மூன்று துறைகளில் நடந்த ஊழல்கள் தொடர்பான கோப்புகள் தன் மேஜையில் உள்ளன; தேவையான போது வெளியிடுவேன் என தெரிவித்தார். விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்பதால், அதில் தி.மு.க.க்கும் வாய்ப்பு இருக்கலாம்; இதுகுறித்து இரு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பேச்சு நடக்கிறது என வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





