பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக்கில், பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்களிடம் அவமதிக்கும் வகையில் பேசும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஒரு இளம்பெண்ணுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் ஜூலை 26 அன்று நடந்ததாக கூறப்படுகிறது. கார்கில் தினத்தை முன்னிட்டு மினிமார்க்–ஜோஜி லா–சோன்மார்க் சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மினிமார்க் சோதனைச் சாவடி அருகே சாலை மூடப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

வைரலான வீடியோவில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண், அமைச்சர் பயணம் காரணமாக பொதுமக்களை ஏன் காத்திருக்க வைக்கிறார்கள் என கேள்வி எழுப்பி, பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், “ஜென் இசட்” என குறிப்பிட்டு கட்டுப்பாடுகளை எதிர்த்து கடுமையாக பேசுகிறார்.

இதையடுத்து சமூக ஊடகங்களில் பலர், நாட்டிற்காக பணியாற்றும் இந்திய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர். வைரலாகும் நோக்கில் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தினர்.

பின்னர் அந்த பெண் மன்னிப்பு கேட்டார். இந்திய ராணுவத்தை மதிப்பதாகவும், தன் சொற்கள் இவ்வளவு அதிருப்தியை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை எனவும் தெரிவித்தார். டில்லியில் இருந்து லடாக் சென்றதாக கூறிய அவர், விஐபி பயணம் இருப்பதை அறியாமல் மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருந்து, மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என கூறப்பட்டும் சாலை திறக்கப்படாததால் கோபத்தில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், ராணுவம் மற்றும் போலீசிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.