விண்வெளித் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சவால்கள் நிறைந்த புதிய துறையிலும் கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
டில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் 20 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார். விவசாயம், கால்நடை மேலாண்மை, பால்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு விண்வெளித் தொழில்நுட்பம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராயுமாறு அவர் வலியுறுத்தினார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சவாலான துறையில் துணிச்சலுடன் களமிறங்கிய இளம் தொழில்முனைவோர்களை சந்தித்தது மகிழ்ச்சியளித்ததாக மோடி கூறினார். அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை நம்பி, தளராத உறுதியுடன் அவர்கள் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் பணிகள் குறித்து பயனுள்ள விளக்கங்களை அளித்ததாகவும், விண்வெளித் துறையில் அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தங்களுக்கு வளர்ச்சிக்கு ஊக்கமளித்ததாக பாராட்டியதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் எதிர்கால திறன்களை வளர்த்தெடுக்கும் இவர்களின் பயணத்தில் மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், உலகிற்கு புதுமையானதும் வணிக ரீதியாக புதியதுமான விண்வெளி தயாரிப்புகளை வழங்க இந்தியாவுக்கு வல்லமை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.





