சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழி கல்விக் கொள்கையால் எந்தவிதமான அழுத்தமும் ஏற்படக்கூடாது என்றும், நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக களைய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், கடந்த ஜூலை 1 முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, நாட்டில் சுமார் 7.5 லட்சம் பள்ளிகள் உள்ள நிலையில், அதில் 4.45% மட்டுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்றும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 99.19% ஏற்கனவே இரண்டு இந்திய மொழிகளை கற்பிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன என்றும் தெரிவித்தார்.

விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கையில் பயன்படுத்தப்பட்ட “நேட்டிவ்” என்ற சொல் காலனித்துவ நினைவுகளைத் தூண்டும் என நீதிபதி ஜாய்மால்யா பக்சி குறிப்பிட்டு, அதற்குப் பதிலாக “இண்டிஜினஸ்” (உள்நாட்டு) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினார். மேலும், புதிய மொழிகளை அறிமுகப்படுத்தும்போது தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும், தேவையான உட்கட்டமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இந்திய மற்றும் வட்டார மொழிகளைத் தாழ்வாகப் பார்க்காமல் அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.