புதுடில்லி: இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தேடி வரும் பாகிஸ்தான் பயங்கரவாதி ஷசாத் பாட்டி, சமூக வலைதளங்களில் வெளியிட்ட புதிய வீடியோவில், “என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் சுதந்திரமாக உள்ளனர்” என கூறி, சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுடன் தன்னுக்கு தொடர்பில்லை என மறுத்துள்ளார்.

தகவலின்படி, பாகிஸ்தானில் ரவுடியாக இருந்து பின்னர் பயங்கரவாதியாக மாறியதாக கூறப்படும் ஷசாத், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதுங்கியிருந்து இந்தியாவில் தனது அமைப்பை செயல்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. ஆதரவு இருப்பதாகவும் முன்பு தகவல் வெளியானது.

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்தகவல் கிடைத்ததையடுத்து, 14 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அந்த முயற்சியை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஷசாத் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது வீடியோவில் ஷசாத், கைது செய்யப்பட்டவர்கள் தன் கூட்டாளிகள் அல்ல என கூறி, கைது செய்யப்பட்டவர்களின் முகங்களையும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களின் விவரங்களையும் அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்; அவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தன்னை தொடர்புகொண்டால் சட்ட மற்றும் நிதியுதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.