ஓய்வு என்பது பணியில் இருந்து விலகுவது மட்டுமே; வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பலர் சொல்கிறார்கள். உலக மூத்த குடிமக்கள் தினம் (ஆக. 21) முன்னிட்டு, திருப்பூரைச் சேர்ந்த 60, 70, 80 வயதை கடந்த பல மூத்த குடிமக்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
முதுமை குறித்த பொதுவான எண்ணங்களை மாற்றும் வகையில், சிலர் மருத்துவம், தொழில், விவசாயம், கற்பித்தல், சமூகப்பணி என தங்கள் துறைகளில் தொடர்ந்து இயங்குகிறார்கள். இன்னொருபுறம், குடும்பத்துடன்—குறிப்பாக பேரக்குழந்தைகளுடன்—கழிக்கும் நேரத்தையும் புதிய வாழ்க்கை அத்தியாயமாக பார்க்கிறார்கள். வயது உடலுக்கு வரலாம்; எண்ணத்துக்கு வர வேண்டியதில்லை என்பதையே அவர்கள் வாழ்க்கை காட்டுகிறது.
ஆயுர்வேத மருத்துவர் பிரகாஷ் (76), வெளி உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் சுத்தமான சைவ உணவையே எடுத்துக்கொள்வதாகவும், உடலுடன் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நேர்மறை எண்ணங்கள் அவசியம் என்றும் கூறினார்.
இந்திய கட்டுனர் சங்கம் திருப்பூர் கிளை நிறுவனத் தலைவர் சுப்ரமணியன் (78), பிரச்னைகள் வந்தால் அதனால் ஏற்படக்கூடிய மோசமான நிலையை முன்கூட்டியே யோசித்து மனதளவில் தயாராக இருப்பது பாதிப்பை குறைக்கும் என்றார். அவிநாசி கருமாபாளையத்தைச் சேர்ந்த விவசாயி வேலுசாமி (62), விவசாயம் மற்றும் தொழிலில் இளம் தலைமுறையை வழிநடத்தி இணைத்துக் கொள்வது முக்கியம் என்றும், வேலைக்காரர்கள் கிடைப்பதே சிரமமாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சாய ஆலைகள் சங்க முன்னாள் தலைவர் திவ்யர் நாகராஜன் (78), துறை நெருக்கடியில் சங்கத் தலைமைப் பொறுப்பை ஏற்று அரசிடம் இருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான நிதியை பெற்றுத்தர முயன்றதும், மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் இயக்கவும் பூஜ்யக் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் பங்காற்றியதும் குறித்து பகிர்ந்தார்; பொதுப்பணியில் ஈடுபட்டதால் தனிப்பட்ட இழப்புகள் இருந்தாலும் சமூக நன்மைக்கான மனநிறைவு இருப்பதாக கூறினார். தொழிற்சங்க நிர்வாகி பழனிசாமி (82), தொழிலாளர்களின் நலனுக்கான போராட்ட உணர்வும் நீதிக்கான உறுதியும் இன்னும் தன்னை சளைக்காமல் இயங்க வைக்கிறது என்றார். ‘நிட்மா’ தலைவர் ரத்தினசாமி (79), இயற்கை பாதுகாப்பும் போக்குவரத்து நெரிசல் இல்லாத உள்கட்டமைப்பும் நகர வளர்ச்சிக்கு அவசியம் என வலியுறுத்தினார். அவிநாசிலிங்கம் பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் (82), நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு, இளம் வயதிலிருந்தே சேமிப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கிய திட்டமிடல் ஆகியவை முக்கியம்; பணியில் இருந்து ஓய்வு பெறலாம், வாழ்க்கையில் இருந்து அல்ல என்றார்.





