சென்னை: லஞ்சம் வாங்கியதாகப் பதிவான வழக்குகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் முதற்கட்டமும் விரிவான விசாரணையும் நடத்தப்பட்ட பிறகு வழக்குகள் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த காலகட்டத்தில் லஞ்சப் புகார் மற்றும் வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 600 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கையும் களவுமாக பிடிபட்டவர்களையும் சேர்த்து 816 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறினர்.





