உத்தர பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில், கடந்த நான்கு மாதங்களில் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
அங்கு கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றும் ரவிகுமார் திவாகர், இந்த காலகட்டத்தில் 10 கொலை வழக்குகளை விசாரித்து 22 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான அதிகபட்ச தண்டனைகள் சட்ட நிபுணர்களிடமும் தண்டனை பெற்றவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
46 வயதான ரவிகுமார் திவாகர், 2022ல் வாரணாசி ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலம் கவனம் பெற்றவர். 2009ல் அஸம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பணியைத் தொடங்கி, 2015ல் சுல்தான்பூரில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2025ல் முஸாபர்நகரின் விரைவு நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில், அவர் விசாரிக்கவிருந்த 100 கொலை வழக்குகள் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி வீரேந்திர குமார் சிங் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரமோத் தியாகி கூறுகையில், விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 100 கொலை வழக்குகளும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெறக்கூடியவை என்றும், நீதிபதி தொடர்ந்து மரணதண்டனை வழங்கி வருவதால் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





