காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்ற 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் அவர் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், குழுவின் துணைத்தலைவராக முதல்வர் விஜய் பொறுப்பு வகித்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றின் தலைவர்கள்/பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தென் மாநிலங்கள் இணைந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30%க்கும் அதிகமாக பங்களிக்கின்றன என்றும், உற்பத்தி, ஏற்றுமதி, சேவை மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் முன்னணியில் உள்ளோம் என்றும் விஜய் குறிப்பிட்டார். பொதுவான பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண்பதன் மூலம், தென் மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.
இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பது கவலைக்குரியது என கூறிய அவர், மருந்துகளின் இணையவழி விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அனுமதியில்லா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த உளவு தகவல் பகிர்வு ஆகியவை போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒருங்கிணைந்த உற்பத்தி மண்டலங்கள், பன்முகத் தளவாடப் பூங்காக்கள் உள்ளிட்டவற்றை துறைமுகங்களும் உலக சந்தைகளும் இணைக்கும் பொதுவான பொருளாதார-தளவாட தொகுப்புகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறினார். கர்நாடகாவின் பொம்மசந்திராவில் இருந்து தமிழகத்தின் ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோ சேவையை நீட்டிக்கும் திட்டத்தை வரவேற்ற அவர், மத்திய அரசு மற்றும் இரு மாநிலங்களின் ஆதரவுடன் அதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார். கடல்சார் பொருளாதாரத்தை முன்னுரிமையாக எடுத்துக்கொண்டு, கடலோர கப்பல் போக்குவரத்தை விரிவாக்குவதன் மூலம் தளவாடச் செலவுகளை குறைக்கலாம் என்றும், 1,076 கி.மீ. நீள கடற்கரையுடன் தமிழகம் சகோதர மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.





