சென்னை: அரிசி விலை உயர்வுக்கு மேற்காசிய போர் காரணம் என தமிழக உணவு அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் தெரிவித்தார். போர் சூழல் காரணமாக எரிபொருள் கிடைப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் உயர்ந்ததாக அவர் கூறினார்.

சட்டசபை விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் சக்கரபாணி, த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின் அரிசி விலை கிலோக்கு ரூ.10-க்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறி, விலை கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், அதன் தாக்கத்தால் நெல் உற்பத்தி அதிகரித்திருந்தாலும் மார்ச் மாதத்திலிருந்து அரிசி விலை கிலோக்கு ரூ.6–7 வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த உயர்வு தமிழகத்தில் மட்டும் அல்ல; அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் தேவையான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதாகவும், எங்கும் தட்டுப்பாடு இல்லை என்றும், விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.