சென்னையின் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.2,185 கோடி கடனை ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) வழங்குகிறது. இதற்கான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு மற்றும் ADB கையெழுத்திட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் நகரில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதுடன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை உயர்த்துவது நோக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் 170 கி.மீ.க்கும் அதிகமான குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் 7 குடிநீர் இறைக்கும் நிலையங்களும், 38 கழிவுநீர் இறைக்கும் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

சென்னையில் முதல் முறையாக ‘ரிங் மெயின்’ எனப்படும் மூடிய குழாய் அமைப்பும் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் மத்திய அரசின் ‘அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்டு அர்பன் டிரான்ஸ்பர்மேஷன் (AMRUT) 2.0’ மற்றும் ‘அர்பன் சேலஞ்ச் பண்டு’ திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.