சென்னை: துணைவேந்தர் இல்லாததால், அண்ணா பல்கலையில் முக்கிய கோப்புகள் மாதக்கணக்கில் நிலுவையில் இருந்து நிர்வாகப் பணிகள் மந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, வேளாண் பல்கலை உள்ளிட்ட 15 பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல்கலைகள் பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்வதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் கவர்னர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. துணைவேந்தர் இல்லாத பல்கலைகளில் நிர்வாக செயல்பாடுகளுக்காக, உயர்கல்வித்துறை செயலர் அல்லது கல்லூரி கல்வி இயக்கக கமிஷனர் உள்ளிட்டோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, கல்விசார் முடிவுகளையும் இக்குழுவே எடுத்து வருகிறது.
அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வேல்ராஜின் பதவிக்காலம் 2024ல் முடிந்ததையடுத்து, உயர்கல்வித்துறை செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பல்கலை கோப்புகள் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் உயர்கல்வித்துறை செயலரின் கையெழுத்துக்காக 2 முதல் 3 மாதங்கள் வரை தேங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, ஜூன் மாதத்தில் தயாரிக்கப்பட்ட கோப்புகளுக்கு இம்மாதமே ஒப்புதல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. தொடரும் காலதாமதம் காரணமாக புத்தாக்க முயற்சிகளில் கவனம் செலுத்த முடியாமல் பல்கலை தடுமாறுவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்; துணைவேந்தர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதே தீர்வு எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.





